1 ஜூன், 2012

சிம்புதேவன் திருமணக் காட்சிகள்!


யக்குனர் சிம்புதேவன் திருமணம் மதுரையில் நடந்தது. இம்சை மன்னன் 23 -ம் புலிகேசி படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கத் தயாராகி வரும் சிம்புதேவன், அதற்கிடையில் திருமணக் கடமையை நிறைவேற்றி இருக்கிறார். திருமணக் காட்சிகளும், பிரபலங்களின் வாழ்த்துப் பதிவுகளும்...






















சிம்புதேவனின் இல்லற வாழ்க்கை சிறக்க கும்பல் சார்பில் மனமார்ந்த நல வாழ்த்துகள்!

- கும்பல் 




30 மே, 2012

கட்சியிலிருந்து தியாகு நீக்கம்!



தாமரை - தியாகு மனமோதல் இன்னமும் தீர்வுக்கு வரவில்லை. இந்நிலையில், ஈரோட்டில் நடந்த தமிழ்த்தேசிய விடுதலை இயக்கப் பொதுப்பேரவை தியாகுவுக்கு எதிராக தீர்மானங்களை இயற்றியிருக்கிறது. 

                                        


அந்தத் தீர்மானங்கள்...


1. 
இடைக்கால அமைப்புக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தைப் பொதுப்பேரவை முழுமையாக விவாதித்தது.  பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து தோழர் தியாகுவை நீக்கியதை பொதுப்பேரவை ஒரு மனதாக ஏற்றுக் கொள்கிறது. மேலும் அவரை அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது என்றும், அவருடைய எதிர்கால நடவடிக்கைகளைக் கணக்கில் கொண்டு மீண்டும் அமைப்பில் இணைத்துக் கொள்வதா இல்லையா என்பதை அடுத்துக் கூடும் பொதுப்பேரவை முடிவு செய்யும் என்றும் தீர்மானிக்கிறது.

2.    இப்பொதுப்பேரவையில் கலந்து கொள்ளாத உறுப்பினர்களுக்கு விளக்கம் கேட்டு மடல் அனுப்புவது என்றும், அவர்கள் அளிக்கும் விளக்கத்தை ஒட்டி அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இவ்விளக்க மடலை 15 நாள்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் பேரவை தீர்மானிக்கிறது.

3.    தமிழ்த் தேசிய விடுதலை இயக்க உறுப்பினர் சுதா காந்தியை நாடு கடந்த தமிழ்ஈழ அரசாங்கத்தின் நியமன உறுப்பினர் பொறுப்பிற்கு இயக்கத்தின் இசைவு பெறாமல் தன்னிச்சையாக அறிவித்ததை பொதுப்பேரவை ஏற்க மறுக்கிறது.


4.   தமிழ்த் தேசியப் பகை சக்தியான இந்தியத் தேசியக் கொடியைத் தியாகு தம் நெஞ்சில் அணிந்து கொண்டு தொலைக்காட்சியில் பங்கேற்றதை இப்பொதுப்பேரவை வன்மையாகக் கண்டிக்கிறது.
5.    தமிழ்ஈழ விடுதலைக்கான ஆதரவையும் தமிழ்த்தேசிய விடுதலைக்கான போராட்டத்தையும் முழு வீச்சுடன் தொடர்ந்து முன்னெடுப்பது என்றும் பேரவை உறுதி கொள்கிறது.

6.    இப்பொதுப்பேரவை தோழர் மு.மோகன்ராசு அவர்களைப் பொதுச் செயலாளராகவும் தோழர்கள் சிவ.காளிதாசன் (சென்னை),  கதிர்நிலவன் (மதுரை),  நா.ஆறுமுகம்  (நாமக்கல்),  தேவேந்திரன் (கோவை) ஆகியோரைத் தலைமைக்குழு உறுப்பினர்களாகவும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கிறது. அடுத்த பொதுப்பேரவை கூடும் வரை இவர்கள் பொறுப்பில் இருப்பார்கள்.

7.    தமிழ்த்தேசிய விடுதலை இயக்க மாத இதழான “சமூகநீதித் தமிழ்த் தேசம்”  ஆசிரியர் குழுவிற்குத் தோழர்கள் கலைவேலு, கதிர்நிலவன் ஆகியோரைப் பொதுப்பேரவை தேர்ந்தெடுக்கிறது. இதழின் பதிப்பாசிரியராகத் தோழர் சிவ.காளிதாசன் அவர்களே தொடர்ந்து நீடிப்பார் என்றும் பொதுப்பேரவை தீர்மானிக்கிறது.

8.    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் தோழர் மு.மோகன்ராசு,   தலைமைக்குழு    உறுப்பினர்கள்     தோழர்கள்  சிவ.காளிதாசன், நா.ஆறுமுகம், கதிர்நிலவன், தேவேந்திரன் ஆகியோருக்குத் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தை வழி நடத்திச் செல்லவும் உரிய நேரத்தில் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவும் இயக்கத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முன்னெடுத்துச் செல்லவும் பொதுப்பேரவை முழு அதிகாரம் வழங்குகிறது.

தியாகு தரப்பு விளக்கம்:

''கட்சியின் பொதுச் செயலாளரை இப்டி தன்னிச்சையாக யாரும் நீக்க முடியாது. இந்திய தேசியக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டது  தவறு என தியாகு தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார். தவிர்க்க முடியாத அந்த சூழலின் பின்னணியையும் அதில் விளக்கி இருக்கிறார். அதனால், அந்த விவகாரத்தை பூதாகரப்படுத்துவது தவறு. தியாகு மீது நடவடிக்கை எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. தியாகுவின் மகள் நாடு கடந்த தமிழீழ அரசின் பொறுப்புக்கு முன்னிறுத்தப்பட்டது பதவி நோக்கத்தில் அல்ல. அது போராட்டகரத்துக்கான அர்ப்பணிப்பு. இவையெல்லாம் தெரிந்தும் தியாகு மீது தொடர் வன்மம் காட்டுபவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்!" என்கிறது தியாகு தரப்பு. 

இரு தரப்பு இடைவிடாத மோதலையும் பார்த்தால், பிரச்சனை இப்போதைக்கு ஓயாது போலிருக்கிறது!

- சே.சத்தியசீலன் 



29 மே, 2012

வேல்முருகன் உயிருக்கு ஆபத்து!


பா.ம.க.வில் இருந்து பிரிந்து தமிழர் வாழ்வுரிமைக் கட்சியைத் தொடங்கியவர் வேல்முருகன். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான வேல்முருகன் கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட வடக்கு மண்டல மண்ணில் மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். இவருடைய பிரிவால் பா.ம.க.வுக்கு வடக்குப் பகுதிகளில் கடுமையான சரிவு ஏற்பட்டிருப்பதும் உண்மை. கட்சியை விட்டுப் பிரிந்தபோது ராமதாசுக்கு எதிராகக் கடுமையாகப் பேசினார் வேல்முருகன். இதனால், வேல்முருகனைக் காலி செய்ய பா.ம.க. தரப்பிலேயே ஆள் தயாரானது. வன்னியர் சங்கத் தலைவரான காடுவெட்டி குருவுக்கும் வேல்முருகனுக்கும் கடுமையான பகை இருப்பதால், பல தரப்பில் இருந்தும் வேல்முருகனுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. 

சமீப காலங்களாகவே வேல்முருகன் எங்கே செல்கிறார், எந்த வாகனத்தில் செல்கிறார், அவரோடு செல்பவர்கள் யார் என்கிற விவரங்களை எல்லாம் சிலர் சேகரிப்பதாக உறுதியான தகவல் போலீஸ் தரப்பை எட்டியிருக்கிறது. ஏற்கெனவே ஈழ விவகாரத்தில் வேல்முருகன் மீது ரகசியக் குழுக்களின் கண் பதிந்திருக்கும் நிலையில், அரசியல் ரீதியான பழிவாங்கலும் அவரைத் துரத்தத் தொடங்கியிருக்கிறது. 
ஆள் பலத்துக்கு சற்றும் குறைவில்லாதவர்தான் வேல்முருகன். ஆனாலும், எதிராளிகளின் திட்டமறிந்து செயல்படுவதே அவருக்கு தக்க தற்காப்பாக அமையும். போலீஸ் அதிகாரிகள் பலரையும் நட்பு வட்டத்தில் வைத்திருக்கும் வேல்முருகன் அவர்கள் மூலமாகவே தனக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துகொள்வது நல்லது. 

வேல்முருகனின் குடும்பத்தைப் பிரிக்கும் முயற்சிகள் ஏற்கனவே நடந்தன. வேல்முருகனின் மனைவிக்கு பல தொலைபேசி எண்களில் இருந்தும் வேல்முருகனின் வாய்ஸில் பேசி அவர் குடும்பத்தை சிதைக்க முயற்சி நடந்தது. அதனை சமயோசிதமாக வென்று காட்டிய வேல்முருகன், தன்னைத் தற்காத்துக் கொள்ளும் முயற்சிகளிலும் வெற்றிபெற வேண்டும்.





28 மே, 2012

குடும்ப ஆட்சிக்கு குறைந்தவர்களா நாங்கள்?



ருணாநிதியின் குடும்ப ஆட்சி
 குடுமிப்பிடிகள் உலகறிந்தவை. 
இதற்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருக்கிறது உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவின் குடும்பம். முலாயம் சிங் யாதவ்வின் மகன்தான் அகிலேஷ். நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அகிலேஷ் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற மேல்சபை உறுப்பினராகி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அவர் ராஜினாமா செய்த கன்னோஜ் தொகுதிக்கு வரும் 24 ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புக் கிடைக்காத கட்சியின் சீனியர் நிர்வாகிகள் பலரும் தங்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என நினைத்திருக்க, அகிலேஷ் தன் மனைவி டிம்பிள் யாதவ்வையே நிறுத்தப் போவதாக அறிவித்து இருக்கிறார். 

அகிலேஷ் யாதவ்வின் இளம் மனைவியான டிம்பிள் உ.பி. முழுக்க மிகுந்த செல்வாக்குப் பெற்றவர். அகிலேஷை சர்வ வல்லமை படைத்த தலைவராக உருமாற்றி ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் கடந்த தேர்தலில் பயணிக்க வைத்தவர் டிம்பிள் தான். ஆனாலும், சீனியர் நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்க, அவர்களைத் தவிர்த்துவிட்டு டிம்பிளை நிறுத்தி இருப்பது கட்சிக்குள் கலவரக் குரலைக் கிளப்பி இருக்கிறது. இதனால் அகிலேஷ் மனம் மாறுவார் என பலரும் நினைக்க கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் ராம்கோபால் யாதவ் மூலமாக டிம்பிள் கன்னோஜ் தொகுதியில் போட்டியிடுவதை உறுதி செய்ய வைத்திருக்கிறார் அகிலேஷ். 

குடும்ப அரசியல் நடத்தியவர்களின் கதி என்னானது என்பது அகிலேஷுக்கு தெரியாது போலும்!


உலுக்கி எடுக்கும் உருமி!





ந்தோஷ் சிவனின் அழகிய ஒளி ஓவியத்தில் திரைக்கு வந்திருக்கிறது உருமி. கேமிராவுக்காக மட்டுமே படத்தை பத்து தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம். அப்படியொரு தத்ரூபப் பதிவு. மன்னர்கள் காலத்துக் கதையைச் சொல்ல, பிரமாண்டமான செட், படைகள் எனக் காட்டுவது அத்யாவசியம். ஆனால், அதனை தவிர்த்து, தன் செய்நேர்த்தியின் மூலமாக மன்னர்களின் கதை என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் சிவன்.

வாஸ்கோடா காமாவின் மிளகுப் பிரியம் தொடங்கி வணிக நோக்கத்தைத் தாண்டி நாட்டையே வசப்படுத்தும் தந்திரத்தை அவர் கைக்கொண்டது வரை வரலாற்று புத்தகங்கள்கூட சொல்லாத கதையை பிரமாதமாகப் பிரித்து மேய்கிறது உருமி! மலைவெளிகளையும், பணியும் சாரலுமாகக் கடக்கும் இயற்கைச் செழிப்பையும், காட்டு முயலின் கர்ப்பத்துடிப்பு தொடங்கி சேற்று யானையின் காலடி வரை சந்தோஷ் சிவனின் கேமிரா விளையாடித் திளைத்திருக்கிறது. கதையில் ஒன்ற முடியாத அளவுக்கு காட்சிகளின் அழகான பதிவு வியக்க வைக்கிறது. இன்னும் கொஞ்ச நேரம் நீளாதா என நினைக்க வைக்கிறது ஒவ்வொரு காட்சியும். கவர்ச்சிக்கான களம் பல இடங்களில் அமைந்தும், அதனை மிகுந்த நாகரிகத்தோடு கையாண்டிருக்கிறது சிவனின் கண்கள். 

அன்றைக்கு எப்படி வெள்ளையர்கள் வணிகத்துக்காக நம் மண்ணை வளைத்து சிதைத்தார்களோ... அதே கொடுமை இன்றைக்கும் தொடர்கிறது. மாவோயிஸ்ட் மண்ணில் நிகழும் மக்களின் போராட்டங்களை வலுவாக எடுத்துச் சொல்லவும், மக்களின் பக்கம் நிற்கவும் எந்த ஊடகங்களுக்கும் துணிவில்லை. மாவோயிஸ்டுகளை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் போக்குக்கும் குறைவில்லை. இத்தகைய காலச்சூழலில் உருமி சரியான சவுக்கடியாக திரைக்கு வந்திருக்கிறது. 

அன்றுபோல் இன்றைக்கும் மேற்கத்திய வல்லூறுகளின் பசிக்கு நாம் இரையாகப் போகிறோமா... இல்லை, அவர்களின் சதினுட்பம் உணர்ந்து, வல்லூறுகளை விரட்டியடிக்கத் தயாராகப் போகிறோமா என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி நிறைகிறது உருமி. பிருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா என அத்தனைக் கதாபாத்திரங்களும் தங்களின் அதிகபட்ச உழைப்பை பதிவு செய்திருக்கும் படம் இது. 

பி.கு: நல்ல படங்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதைதான் தெரிந்த கதையாயிற்றே... உருமிக்கு தமிழில் பெரிய வரவேற்பு இல்லை. சில வாரங்கள் தாக்குப் பிடித்து ஓடினாலே சாதனைதான் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். 


25 மே, 2012

தியாகுவை கவிழ்த்த விஜயலட்சுமி!




காதலின் அழகியலையும் ஆத்மார்த்தத்தையும் அழுத்தமாகச் சொல்பவை தாமரையின் பாடல்கள். ஆனால், அவருடைய காதலும் ஆத்மார்த்தமுமே தற்போது அவதிக்குள்ளாகி இருக்கிறது. தாமரை - தியாகு மோதலை முதன்முறையாக நாம் சொன்னபோது, பலராலும் அதனை நம்பவே முடியவில்லை. சிலர், 'அப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது' என்றார்கள் வேண்டுதலாக. ஆனால், இன்றைக்கு மீடியாக்கள் தாமரை - தியாகு மோதலை பிரித்து மேயத் தொடங்கிவிட்டன. அந்தரங்க விவகாரங்கள் என்றால் நம் மீடியாக்களுக்கு சொல்ல வேண்டுமா என்ன?

ஈழ ஆர்வலர்களாகவும் உணர்வாளர்களாகவும் ஒருமித்து இருந்த தாமரை - தியாகு இருவரும் இப்போது எதிரெதிர் கோணத்தில் பயணிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், ஈகோ, காதல், தவிப்பு என இரு தரப்புக்கும் இடையே நடக்கும் பனிப்போர் தான் எல்லோராலும் உற்றுக் கவனிக்கப்படுகிறது. தாமரையுடன் நல்லபடி வாழ்க்கை நடத்திய தியாகு திடீரென தடம் மாறினாரா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. விஜயலக்ஷ்மி என்ற பெண்ணையும் தியாகுவையும் மையப்படுத்திக் கிளம்பும் பரபரப்புகள் ஏராளம். பல மாதங்களாக அந்தப் பெண் தன் கணவரை விட்டுப் பிரிந்து சென்னைக்கு வந்து தியாகுவின் பராமரிப்பிலேயே தங்கிவிட்டதாக சொல்கிறார்கள். தியாகுவின் முதல் தாரத்து மகளான சுதாவும் விஜயலக்ஷ்மியும் சேர்ந்து தங்கி இருந்ததாகவும் தகவல். 

தாமரைக்கு ஆதரவாகப் பேசும் சிலர் இப்படி சொல்கிறார்கள்... ''தியாகுவுக்கு இப்போது எத்தனை வயதாகிறது? இந்த வயதில் எதற்காக திருமணமான ஒரு பெண்ணோடு அவர் தனியாக வாழ வேண்டும். இயக்க வேலைக்காக வெளியே தங்குவதாக தாமரையிடம் பொய் சொல்லிவிட்டு, விஜயலக்ஷ்மியோடு அவர் பல இடங்களுக்கும் ஏன் போக வேண்டும்? விஜயலட்சுமியை மகளுக்கு நிகரானவர் என சொல்லும் தியாகு, அந்தப் பெண்ணின் கணவரை மிரட்டியது ஏன்? தாமரையோடு சேர்ந்து வாழும் எண்ணம் இல்லாத தியாகு அதனை வெளிப்படையாக சொல்லி இருக்கலாம்... ஆனால், அப்படி செய்யாமல் தாமரை அவரைக் கொடுமைப்படுத்தியதாகவும், சித்திரவதை செய்ததாகவும் கிளப்பிவிட்டு, இவ்வளவு பெரிய சர்ச்சைகளுக்கு வித்திட்டது ஏன்?" என்கிறார்கள் தாமரையின் நிலைப்பாடு அறிந்தவர்கள்.

தியாகு தரப்பு விளக்கத்தை நமக்கு கடிதமாக அனுப்பிய நண்பர்கள் சிலரோ, ''விஜயலட்சுமிக்கும் தியாகுவுக்கும் தவறான உறவு எதுவுமே கிடையாது. தாமரை திட்டமிட்டு இப்படி கிளப்பிவிட்டு பரிதாபம் தேடப் பார்க்கிறார். முதல் மனைவியோடும், மகளோடும் தியாகு பேசத் தொடங்கியதுதான் இவ்வளவு பெரிய சிக்கலாகிவிட்டது. இன்றைய மீடியாக்களின் தன்மையை அறிந்திருந்தும் தாமரை இப்படி நடந்துகொண்டதை ஜீரணிக்கவே முடியவில்லை!" என்கிறார்கள் ஆதங்கமாக.
இதற்கிடையில், இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தையும் எட்ட, இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் விதமாக தாமரை தியாகு இருவரையும் போனில் பேச வைக்க சிலர் முயண்டார்கலாம். ஆனால், அந்த முயற்சி கைகூடவில்லையாம். 

ஈழ விவகாரத்தில் தீவிர ஆர்வலராக இருக்கும் சீமான் மீது இத்தகைய சர்ச்சை கிளம்ப காரணமாக இருந்த பெண்ணின் பெயரும் விஜயலக்ஷ்மிதான்! இப்போது தியாகுவை சர்ச்சையில் சிக்க வைத்திருப்பவரின் பெயரும் விஜயலக்ஷ்மிதான். என்னவொரு வேதனையான ஒற்றுமை!

23 மே, 2012

மதுரை கலெக்டர் சகாயம் மாற்றப்பட்டது ஏன்?





டந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்த நேரம் அது. முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் தனக்கு நெருக்கமான பத்திரிக்கையாளர்கள் பலருக்கும் பரவசம் போங்க போன் போட்டுக் கொண்டிருந்தார். ''எனக்கு அப்பவே தெரியும்... தி.மு.க.வோட அட்டூழியங்களுக்கு இந்தத் தேர்தல்ல சரியான அடி கிடைக்கும்னு நல்லா தெரியும். அவங்களோட அடாவடிகளை கர்த்தராலேயே பொறுக்க முடியலை. அதனாலதான் அந்தம்மாவை கர்த்தர் தனி மெஜாரிட்டியில ஜெயிக்க வைச்சிருக்கார்!" என போனிலேயே ஸ்வீட் கொடுக்காத குறையாகக் கொண்டாடினார். 

அதே அதிகாரியின் சமீபத்திய புலம்பல்...

''கர்த்தர் இந்த ஆட்சியில நடக்குற எல்லா அட்டூழியங்களையும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கார். விலைவாசி தொடங்கி அதிகாரிகளை பந்தாடுற கொடுமைகள் வரைக்கும் இங்கே ஆட்சியா நடக்குது? சீக்கிரமே இதுக்கெல்லாம் கர்த்தர் முடிவு காலத்தை கொடுப்பார்!"

அனேகமாக இந்நேரம் கண்டுபிடித்திருப்பீர்கள் இந்த புலம்பல் அதிகாரி யார் என்று? சாட்சாத் நம்ம உமாசங்கர்தான். நேர்மையிலும், கடமையிலும் நெருப்புக்கு நிகரான இந்த அதிகாரியின் புலம்பலில் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மையான ஆதங்கம் இருக்கிறது. அவர் மட்டுமல்ல... அரசுக்கு நெருக்கமானவர்கள் என வர்ணிக்கப்படும் அதிகாரிகள் தொடங்கி தள்ளிவைப்புக்கு ஆளாகி இருக்கும் அதிகாரிகள் வரை இந்தப் புலம்பல் எதிரொலிக்கவே செய்கிறது. 

மதுரை கலெக்டராக சகாயம் ஒரு வருடத்துக்கும் மேலாக நீடித்ததே பெரிய ஆச்சரியம்தான். மணல் கொள்ளை தொடங்கி அழகிரியின் ஆட்டம் வரை கட்டுப்பாட்டில் வைத்திருந்த சகாயம் திடீரென கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு தூக்கி அடிக்கப்பட்டிருக்கிறார். ஆள் இல்லாத பாலைவனத்துக்கு அனுப்பினாலும், கடமை கடமை என கண்ணை மூடிக்கொண்டு பணியாற்றக் கூடியவர்தான் சகாயம். ஆனால், மதுரையின் அமைதிக்கும், நிம்மதிக்கும் உத்திரவாதமாக இருந்த கண்ணப்பன், சகாயம் இருவரும் சமீப காலங்களுக்குள் தூக்கி அடிக்கப்பட்டது ஏன் என்கிற கேள்வி எல்லோரையும் குடைகிறது. 

'அரசு அதிகாரி என்றால் டிரான்ஸ்பர் என்பது சகஜமானதுதானே... இதற்கு ஏன் மீடியாக்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?' என மிக இயல்பாக இந்த பரபரப்பு விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சகாயம். ஆனால், அவர் தூக்கியடிக்கப்பட்ட காரணத்தைத் தெரிந்துகொள்ள மதுரைவாசிகள் ஆதங்கம் அடங்காமல் இந்த விவகாரத்தை விவாதித்தபடியே இருக்கிறார்கள். 

'சகாயம் இருக்கும் வரை மதுரையைப் பற்றி நாம் கவலைப்படவே தேவையில்லை அம்மா...' என முதல்வரிடமே ஒரு அதிகாரி அடித்த கமெண்டுதான் சகாயத்துக்கு சறுக்கலை உண்டாக்கிய முதல் சம்பவம் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில். 'அப்போ, அவர் அங்கே தனி ஆட்சி நடத்துறாரா... இந்த ஆட்சிக்கும் மதுரைக்கும் சம்பந்தம் இல்லையா... குற்றங்கள் குறைந்து மதுரை இன்றைக்கு நிசப்தமாக இருப்பதற்கு அம்மாதானே காரணம்' என கமென்ட் அடித்த அதிகாரியை மொய்த்த காச்மூச் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. அடுத்த சம்பவங்கள் ஆளுங்கட்சி புள்ளிகளால் உண்டானவை. 'நாங்க சொல்றதை காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறார். பப்ளிசிட்டிக்காக மீடியாக்களை கையில் வைத்துக்கொண்டு ஏதேதோ செய்கிறார். நம்ம கட்சிக்காரங்களையே கைது பண்ணி நடுநிலையானவர் மாதிரி காட்டிக்கிறார்...' என இன்னும் இன்னுமான புகார்கள் சகாயத்தின் மீது படைஎடுத்தபடி இருந்தன.

இவற்றையெல்லாம் விட, அழகிரியின் குடும்பத்தினர்களில் ஒருவரையாவது கைது செய்து உள்ளே தள்ள நடவடிக்கை மேற்கொள்ளும்படி கண்ணப்பன், ஆஸ்ரா கார்க், சகாயம் மூவருக்கும் உத்தரவிட்டப்பட்டதாகவும், அரசின் எதிர்பார்ப்புக்கு தக்க வேகத்தில் செயல்பட சகாயம் மறுத்ததாகவும், சட்டரீதியான முறையிலேயே செயல்பட முடியும் எனச் சொன்னதாகவும் கோட்டை முழுக்க பேச்சிருக்கிறது. சகாயம் டம்மியான பதவிக்கு மாற்றலான பின்னணி இதுதான் என்கிறார்கள் பலரும். 


அதிகாரிகள் தூக்கியடிக்கப்படுவதோ, அலைக்களிக்கப்படுவதோ இந்த ஆட்சியில் புதிதாக நடப்பவை அல்ல. ஆனால், மக்களின் பேரபிமானத்தையும், நம்பகத்தையும் பெற்ற அதிகாரிகளை தொடர்ந்து இப்படி நாலாபுறங்களுக்கும் தூக்கி அடிப்பது, இதர அதிகாரிகளையும் எச்சரிக்கும் சர்வாதிகாரமயன்றி வேறென்ன?  அரசின் நிலைப்பாடு என்ன எனப் புரியாமல், யாருக்குத் தலையாட்டுவது, யாரை தவிர்ப்பது எனப் புரியாமல் தடுமாறும் அதிகாரிகள் எத்தனை பேர்? 

உதாரணத்துக்கு ஒரே ஒரு சம்பவம்...

கேபிள் ஊழியர்களை மிரட்டிய கலாநிதி மாறனை உடனே கைது செய்யப்போவதாக அரசுத்தரப்பு ஆவேசமாக அறிவித்ததையும், அடுத்த நாளே கலாநிதி தனி விமானத்தில் வெளிநாட்டுக்கு கிளம்பிப் போனதையும் மக்கள் நன்கறிவார்கள். கலாநிதி மாறன் பத்து நாட்கள் கழித்து சென்னை திரும்பினார். அந்த வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களுக்குள் கலாநிதிக்கும் கார்டனுக்கும் என்ன ஒப்பந்தம் நடந்தது? 'கலாநிதி ஸ்டேஷனில் ஆஜராகாவிட்டால் கைது செய்வோம்' என மீடியாக்களிடம் முழங்கிய அந்த போலீஸ் அதிகாரி இந்த அரசின் நிலைப்பாடு புரியாமல் உளறிவிட்டோமே என மனதுக்குள் என்ன பாடுபடுவார்? நாளைக்கு தி.மு.க. ஆட்சி வந்தால் அந்த அதிகாரியை கலாநிதி சும்மா விடுவாரா?

பணியைச் செய்தாலே பனிஷ்மென்ட் என்கிற இந்த நிலை நீடித்தால் சகாயத்துக்கு மட்டுமல்ல... எந்த அதிகாரிக்கும் சகாயமாக இந்த அரசு இருக்கப்போவது இல்லை. கடமையே கதியெனக் கிடந்த ஒரு அதிகாரியை கர்த்தரின் புகழ் பரப்பும் கூட்டங்களை நடத்தும் மதப்போதகராக மாற்றியதும், எழுத்தாளராகவும் சமூக ஆர்வலராகவும் இருந்த ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை தனிக்கட்சி தலைவராகவும் மாற்றிது இத்தகைய பந்தாடல்கல்தானே... 'தினம் ஒரு மாற்றல்...' என தினசரிப் பத்திரிக்கைகளுக்குத் தீனியும், 'ஓராண்டு சாதனை பாரீர்' என வெட்கப்படத்தக்க விளம்பரங்களும் கொடுப்பதற்குத்தான் அரசு என்று பெயரா? 

ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வல்லமையாளராக தன்னைக் காட்டத் துடிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா முதலில் தன் நிலைப்பாடுகளைத் தானே தீர்மானிப்பவராக மாற வேண்டும் என்பதே எல்லோருடைய விருப்பமும்!

- கும்பல்  

22 மே, 2012

பேரறிவாளன் +2 பாஸ்!




ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கும் பேரறிவாளன் சில மாதங்களுக்கு முன்பு நடந்த பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை சிறைக்குள்ளேயே எழுதினார். தற்போது வெளியாகி இருக்கும் தேர்வு முடிவில் பேரறிவாளன் தேர்ச்சி பெற்றிருக்கிறார்.மொத்தமாக அவர் பெற்ற மதிப்பெண் 1096. தமிழ்ப் பாடத்தில் 185 மதிப்பெண் பெற்றிருக்கிறார் பேரறிவாளன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ., நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர்சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்கள் பேரறிவாளனுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
சிறைத்துறைஅதிகாரி டோக்ராவும்பேரறிவாளனின் தேர்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

அடுத்தபடியாக இதழியல் சம்பந்தமான படிப்பை படிக்கும் திட்டத்தில் இருக்கும் பேரறிவாளன் திறந்தவெளி பல்கலைகழகத்தின் மூலமாக அதற்கு அனுமதி கேட்டிருக்கிறார்.

தூக்கின் நிழலில் வாடினாலும், விடாப்பிடியான நம்பிக்கையோடு படித்து, தேர்ச்சி பெற்றிருக்கும் பேரறிவாளனை நாமும் வாழ்த்துவோம்!

20 மே, 2012

ராமஜெயம் கொலையில் ஜவளிக்கடை அதிபர்!



ரண்டு மாதங்களாக போலீஸ் அதிகாரிகளுக்கு போக்குகாட்டி வரும் ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்த திருப்பம். சென்னையில் உள்ள மிகப் பிரசித்தியான ஜவளி நிறுவனத்தின் அதிபரை தற்போது வளைத்திருக்கிறது போலீஸ். குடும்ப ரீதியான விவகாரத்தில் ராமஜெயம் தலையிட்டதாகவும், இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு அந்த ஜவளிக்கடை அதிபரின் குடும்பம் ஆளானதாகவும் விசாரணையில் கண்டுபிடித்து இருக்கிறது போலீஸ்.

 நான்கெழுத்து ஜவளி நிறுவனத்தின் அதிபரை விசாரணைக்கு போலீஸ் அழைக்க, அவரோ ஆளும்கட்சியின் உயரிய இடத்தைப் பிடித்து ஜகா வாங்கிவிட்டாராம். 'அவருக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்றால், ஏன் ஆளும்கட்சியிடம் சரண்டர் ஆக வேண்டும்?' எனக் கேட்கிறது போலீஸ்.

 இதற்கிடையில், ராமஜெயத்தின் பெண் தொடர்புகள் குறித்த தகவல்கள் மலை மலையாகக் குவிந்தபடி இருக்கிறதாம். காதல் திருமணப் பிரச்சனைகளில் கட்டப்பஞ்சாயத்து செய்வது, பின்னர் அவர்களுக்குள் பிரச்சனை வரும்போது சம்பந்தப்பட்ட பெண்ணை வசமாக்கி வைத்துக்கொள்வது என ராமஜெயத்தின் லீலைகள் தொடர்ந்திருக்கின்றன. (இறந்த ஒருவரைப் பற்றி தவறாக எழுதுவது நாகரீகம் அல்ல. ஆனாலும், போலீஸ் சோர்ஸில் சொல்லப்படும் தகவல்கள் அவ்வளவு பயங்கரமானதாக இருக்கும் நிலையில், அதனை வாசகர்களிடம் மறைப்பதும் நாகரீகம் இல்லைதானே...) ஜவளிக்கடை அதிபர் குடும்பத் தகராறிலும் இதே சிக்கல்தான் நடந்ததாம்.

 பின்குறிப்பு: திருச்சியில் உள்ள பிரசித்தியான ஜவளி நிறுவனமான சாரதாஸை ஏற்கனவே போலீஸ் விசாரித்து முடித்தது. ராமஜெயத்துக்கும் சாரதாஸ் உரிமையாளருக்கும் நில விவகாரத்தில் இருந்த சிக்கலை ஊரே அறியும். இதற்காக இலங்கையில் உள்ள கூலிப்படைகளை வைத்து சாரதாஸ் அதிபர்தான் ராமஜெயத்தை கொன்றுவிட்டார் என ஆரம்பத்தில் செய்தி கிளம்பியது. போலீஸ் விசாரணைக்குப் பிறகு அது உண்மையல்ல என்பது புலனானது. இந்நிலையில்தான் இரண்டாவது ஜவளி அதிபர் சிக்கி இருக்கிறார்.

 - கும்பல்

18 மே, 2012

மறுக்கிறார் தியாகு!



''என்னை நீக்க முடியாது!"











மிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தியாகு நீக்கப்பட்டதாக எழுதி இருந்தோம். இந்நிலையில், தியாகு  தமிழ்த் தேசிய விடுதலை இயக்க நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதத்தின் நகல் நமக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் பார்வைக்கு.... 







தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

பொதுச் செயலாளர்: தியாகு

முக்கிய அறிவிப்பு
சென்னை
16.05.2012

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் என்னை நீக்கியிருப்பதாக 'அமைப்பாளர்' தோழர் சிவ. காளிதாசன் பெயரில் 13.05.2012 நாளிட்டு மின்னஞ்சல் வழியாக ஒரு கடிதம் எனக்கும் பல தோழர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அமைப்புக் குழு உறுப்பினர்கள் என்ற பெயரில் தோழர்கள் வேலிறையன், கதிர்நிலவன், மோகன்ராசு ஆகியோரும் இக்கடிதத்தில்  ஒப்பமிட்டுள்ளனர்.

நான் தனிமனித ஒழுக்கக் கேடுகளால் இயக்கத்திற்கும் தமிழ்த் தேசத்திற்கும் மாறா அவமானத்தைத் தேடித் தந்து விட்டதாகவும், இவ்வொழுங்கீனத்தின் மூலம் தமிழ்ச் சமூகத்திற்குப் பெரும் துரோகம் இழைத்து விட்டதாகவும் இக்கடிதம் குற்றஞ்சாற்றுகிறது.

இந்தக் குற்றச்சாற்றுகளை நான் திட்டவட்டமாக மறுக்கிறேன்.

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்பு நெறிகளுக்கு முரணாக மேற்கண்ட தோழர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு செல்லத்தக்கதன்று. பொதுப்பேரவை அல்லது பொதுக்குழுதான் இயக்கத்தின் பொதுச் செயலாளரைத் தேர்ந்தெடுக்கவும், மாற்றவும், நீக்கவும் அதிகாரம் உடையது. தம்மைத் தாமே அமைப்பாளர் என்று அறிவித்துக் கொள்ளும் ஒருவருக்கு இந்த அதிகாரமில்லை.

இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமுன் என்னிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்ற இயற்கை நீதியையும் கூட இத்தோழர்கள் எனக்கு மறுத்துள்ளனர். 

அமைப்புச் சிக்கல்கள் தொடர்பாகத் திருப்பூரில் 2012 மார்ச்சு 31ஆம் நாள் கூடிய சிறப்புப் பேரவையின் முடிவுகளுக்கு முரணாக மேற்படிக் கடிதம் அமைந்துள்ளது. இந்தச் சிறப்புப் பேரவைக்குப் பின் அதன் முடிவுகளை எவ்வகையிலும் மாற்றுவதற்கான அமைப்புமுறை நிகழ்வு ஏதும் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படி ஒரு கடிதத்தை எழுதிப் பரவலாக அனுப்பியதன் வாயிலாக இயக்கத்தின் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் குலைத்துள்ள தோழர்கள் சிவ. காளிதாசன், வேலிறையன், கதிர்நிலவன், மோகன்ராசு ஆகியோர் இயக்கத்தின் உறுப்பினர் பொறுப்பு உட்பட எல்லாப் பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இம்முடிவை எடுப்பது தவிர அமைப்புக்கு வேறு வழியில்லை. இந்தத் தோழர்கள் விரும்பினால் இந்நீக்கத்துக்கு எதிராகப் பொதுப் பேரவைக்கு முறையீடு செய்து கொள்ளலாம். பொதுப் பேரவை கூடும் நாள் விரைவில் அறிவிக்கப்படும். இதற்கிடையில் இந்த நான்கு தோழர்களுடனும் இயக்க உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எவரும் அரசியல் வகையிலோ அமைப்பு வகையிலோ எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

பொதுச் செயலாளர்

- கும்பல்

Recent Comments

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Sweet Tomatoes Printable Coupons